காஞ்சி பல்கலை கழகத்தில் 8ஆவது சர்வதேச யோகா தினம்!
8ஆவது சர்வதேச யோகா தினம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆயுர்வேத மருத்துவர் குருபிரசாத் தலைமையில், மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 500 பேர் இந்த மெகா யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். தொடர்ந்து இளங்கலை ஆயுர்வேத மாணவர் பார்கவ் ஆச்சார் யோகா ஆசனங்களை அதன் சிகிச்சை பயன்பாடுகளுடன் செய்து காண்பித்தார்.
மாண்புமிகு துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.வி. ராகவன் தலைமை உரையாற்றினார். அவர் தனது தலைமை உரையில் ஆரோக்கியம் பேணுதலின் முக்கியத்துவத்தையும் அதில் யோகாவின் பங்கினையும் பற்றி எடுத்துரைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிராண்ட் மாஸ்டர் திரு ஆர்.பி.ரமேஷ் அவர்களும் கிராண்ட் மாஸ்டர் செல்வன் ஆர். பிரக்ஞானந்தா அவர்களும் கலந்து கொண்டனர். பிரக்ஞானந்தாவுக்கு இளம் சாதனையாளர் விருதும் பயிற்சியாளர் ரமேஷுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதும் விழாவில் வழங்கப்பட்டன.
இன்றைய வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை மாணவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாக பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டத்தினர் பல்வேறு போட்டிகளை நடத்தியிருந்தனர். அப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். 20 வயதுக்குட்பட்டோர் பிரிவு மற்றும் மாநில ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் பரிசை வென்ற பல்கலைக்கழக மாணவர் கே.வி.பாரதிராஜாவும் விழாவில் கவுரவிக்கப்பட்டார்.