மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்

ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்
ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்

மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்

நவராத்திரி விழாவின் முக்கியமான மற்றும் உன்னதமான நாளாக விளங்கும் விஜயதசமி, ‘ஜெயம்’ உண்டாகும் நாளாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் “விஜயதே” என்ற பொருத்தமான தலைப்பில் கலைமாமணி முனைவர். லட்சுமி ராமஸ்வாமி அவர்களின் மாணவிகள் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி, மயிலாப்பூர் “ரசிக ரஞ்சனி சபா” வின் நவராத்திரி ‘ந்ருத்யோத்சவம்’ விழாவை முன்னிட்டு வியாழக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடனக்கலைஞர்கள் – ஜாகோசனி சாட்டர்ஜீ,  நிவேதிதா ராகவன், தேவி ஹரிணி, ஐஸ்வர்யா, அதிதி ராம்பிரசாத் மற்றும் வைஷாலி ஆகியோர்.

தேர்வு செய்யப்பட்ட பாடல்களும் நடன அமைப்பும் முனைவர் லட்சுமி அவர்களின் ஆழ்ந்த சிந்தனையாளர், ஒரு சிறந்த ஆய்வாளர் என்பதை அழகாக உணர்த்தியது. மேலும் ஒரு நொடி கூட தொய்வு தெரியாமல் கோர்வையாக நிகழ்ச்சியை அமைத்த விதம் அற்புதம்.

முத்துசுவாமி தீக்ஷிதரின் படைப்பான “ஆனந்தாம்ருதகர்ஷிணி” என்ற கீர்த்தனையின்  முகப்பாக நவதுர்கைகளைச் சித்தரிக்கும் விருத்தத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.  எந்த இடத்தில் பதார்த்த அபிநயம் வேண்டும் எந்த இடத்தில் தன் கற்பனையைச் சேர்க்கவேண்டும் என்று அளந்து செய்தது போல் இருந்தது நடனஅமைப்பு. ஒளி அமைப்பும்,  அரங்க மேடையை உபயோகித்த விதமும் கவனத்தை ஈர்த்தது.




பாடலுக்கேற்ற நடன அமைப்பு என்பதைக் கடந்து உடை, ஒப்பனை, ஒளி, ஒலி, அரங்க அமைப்பு,  அதை உபயோகிக்கும் விதம் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இவரின் ஈடுபாடு, இப்படித்தான் ஒரு நடனக் கலைஞர் இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக அமைகிறது. இவரின் இந்த சிரத்தையினாலும் , நாட்டியத்தில் இவர் கொண்ட பக்தியினாலும் தான் இவரின் நடனப் பள்ளியான ஸ்ரீமுத்ராலாயா ISO 9001-2015 சான்றிதழ் பெற்று தன் 30 ஆம் ஆண்டை நோக்கி வெற்றிகரமாக நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது.

குழுவாக மட்டுமல்ல தனியாகவும் ரசிகர்களை ஈர்க்க வல்லவர்கள் இவரின் மாணவிகள்.இதற்குச் சான்றாக விளங்கியது நிவேதிதா ராகவன் வழங்கிய, திரு.பாபநாசம்சிவன்அவர்களின்படைப்பான “நான் ஒரு விளையாட்டு பொம்மையா” என்ற கீர்த்தனை, தத்துவார்த்தம் நிறைந்த வரிகள். அந்த வரிகளின் அழகை மேன்மைப்படுத்தும் வகையில் அமைந்த நடனஅமைப்பு. “விளையாட்டு பொம்மையா”  என்ற வார்த்தைகளை இத்தனை விதத்தில் காண்பிக்க முடியுமா என்று பிரமிக்க வைத்தது; கண்களில் நீர் பெருகச் செய்தது.

ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்
ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்

மதுரை மீனாட்சி குடியிருக்கும் கோவிலுக்கே அழைத்துச் சென்றது  “அங்கயர்கண்ணி” வர்ணம்.  மீனாட்சி திக்விஜயம் செய்து சிவபெருமானைக் கண்டதும் தன் பெண்மையை உணர்ந்து அவரை மணந்ததும், குமரகுருபரர் புலமையில் நெகிழ்ந்து அவரின் பிள்ளைத் தமிழ் கேட்டு, தானே இறங்கி வந்ததும்,  தன் பால் இருந்த பக்தியினால் தன் கண்களை இழந்த கலைஞனுக்கு அருளியதும் சஞ்சாரியில் அமைந்திருக்க, விறுவிறுப்பான ஜதிகளோடும், ஸ்வரங்களோடும் பிரமிக்க வைத்தது.  ஜதிகளில் ஒன்று போல் கலைஞர்கள் எல்லா அடவுகளையும் அதன் அமைப்பு குன்றாமல் ஆடியது அவர்களின் கடினஉழைப்பைக் காட்டியது. ஒரு காட்சி அமைக்கப்பட்டது என்று கூறுவதைவிட செதுகப்பட்டது என்று தான் கூற வேண்டும். கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்ட விதமும், அதனைச் சிறப்பாக வழங்கிய கலைஞர்களின் திறமையும் மிகவும் பாராட்டுக்குரியது. மதுரை மாநகரின் வர்ணனைகளில், தருமியின் கதையைப் புகுத்திய விதம் ஒரு நொடி திருவிளையாடல் திரைப்படத்திற்கே நம் சிந்தையைக் கொண்டு போனது என்று சொன்னால் மிகை ஆகாது.

ராமனை யமனாக எவராவது எண்ணிப் பார்க்க முடியுமா? அப்படி ஒரு வித்யாசமான கருவைக் கொண்ட படைப்பு, புரந்தரதாசரின்   “எமனெல்லி காணெனெந்து ஹேலபேடா” என்று துவங்கும் க்ருதி. கெடு சிந்தை கொண்டவர்களுக்கு, ராமனே யமனாகிறான் என்ற கருத்தைக் கொண்டு அமைந்துள்ளது. தன்னை நினைப்பவர்களுக்கு நொடிப் பொழுதில் தோன்றி சங்கடம் தீர்த்தவன் ஹரி என்பதை வலியுறுத்தி அமைத்த ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கும் மனதிற்கும் விருந்து. குறிப்பாக நரசிம்ம அவதாரத்தினை மேடைப் படியில் அமைத்திருந்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது.

எந்த ஒரு நடன அமைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் பலவிதமான கருத்துகளையும் கோர்த்து அமைப்பது முனைவர் லட்சுமி ராமஸ்வாமி அவர்களின் தனித்தன்மை. அவ்வகையிலேயே அமைந்தது நவரசகானடாவில் அமைந்த தில்லானா. நாட்டியத்தை ஒரு இறைவியாக நாட்டியதேவியாக வடிவமைத்து ஒவ்வொரு கோர்வையின் முடிவிலும் அவள் அணியும் அபாரணங்களைக் காட்டியது சுவாரஸ்யம். முனைவர் சே. ரகுராமன் அவர்களின் வரிகளில் “ஒன்சுவை ஒன்பதினை அணியெனக் கொண்டனை ” என்று நவரசங்களைத் தன் அணிகலன்களாகக் கொண்டவளாய் நாட்டிய தேவியைப் போற்றுவது, அற்புதம்.





உடை அலங்காரம், சிகை அலங்காரம் என்று அனைத்திலும் பழமை கலையாத புதுமை காட்டியதில் அழகுணர்ச்சியை உணரமுடிந்தது. ஒப்பனை சிறப்பாகச் செய்த திருமதி திரிபுரசுந்தரி அவர்களுக்கும்,  ஒளி அமைப்பில் நம்மை மெய்சிலிர்க்க வைத்த திரு.ஐயப்பன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் உரியன.

மனதை வருடிய பின்னணி இசையை இசைப்பதிவில் நமக்கு வழங்கிய கலைஞர்கள்: இசைஅமைப்பு – முனைவர் திரு ராஜ்குமார் பாரதி, நட்டுவாங்கம் மற்றும் நடனஅமைப்பு – முனைவர் லட்சுமிராமஸ்வாமி, குரலிசை – திரு வீரராகவன், மிருதங்கம் – முனைவர் குருபரத்வாஜ் மற்றும் திரு வேதகிருஷ்ணராம், வயலின் – திருஅனந்த கிருஷ்ணன், புல்லாங்குழல் – திரு ஸ்ருத்திசாகர் அவர்கள்.

துவக்கம் முதல் இறுதி வரை உற்சாகம் குறையாமல் ஆடிய எல்லோருக்கும் பாராட்டுக்கள். கண்களுக்கும் செவிக்கும் இந்நிகழ்வு அரு விருந்தாக அமைந்தது.




மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்
மனதைக் கொள்ளை கொண்ட ஸ்ரீ முத்ராலயா நாட்டியக் கலைஞர்கள்