ஆயுர்வேதம் அனைத்து உயிரினங்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக வளர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் – ஸ்ரீ காஞ்சி காமோகோடி பீடாதிபதி
நாசரத்பேட்டை ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஸ்ரீ காஞ்சி காமோகோடி பீடத்தின் 70ஆவது பீடாதிபதி, பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிஜி மகராஜ் புதுப்பிக்கப்பட்ட 60 படுக்கைகள் கொண்ட பஞ்சகர்மா சிகிச்சை அறைகளோடு கூடிய பொது வார்டு கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது, “பழங்காலத்திலிருந்தே பாரதம் அறிவு மற்றும் ஞானத்தின் ராஜ்ஜியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்காக நாட்டிய சாஸ்திரம், சங்கீதம், யோகா மற்றும் ஆயுர்வேத சாஸ்திரம் போன்ற பல்வேறு அறிவியல் மற்றும் அறிவு அமைப்புகளை உலகிற்கு வழங்கியுள்ளது என்று கூறினார்.
பூஜ்யஸ்ரீ னித ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆயுர்வேதத்தைப் பிரச்சாரம் செய்து, ஆயுர்வேதத்தை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்காகவும், சென்னையில் உள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காகவும், காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் கீழ் ஓர் ஆயுர்வேதக் கல்லூரியை நாசரத்பேட்டை கிராமத்தில் 1995ஆம் ஆண்டு தொடங்கியதை பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார்.
மேலும் ஸ்வாமிகள் தனது அனுகிரஹ பாஷனத்தின் போது, ஆயுர்வேதம் மற்றும் பிற இந்திய அறிவு முறைகளை சமஸ்கிருதத்தின் அசல் எழுத்துக்கள் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், ஏனெனில் சமஸ்கிருதம் மற்ற மொழிகளைப் போலல்லாமல் இந்த விஷயத்தைப் பற்றிய பரந்த புரிதலை அளிக்கிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் தனது சூத்திரத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் துயரங்களிலிருந்து வெளியேற்றுவதன் அவசியத்தை விரிவாகக் கூறியுள்ளதையும் நினைவு கூர்ந்தார். பிராணிகள் உட்பட அனைத்து உயிரினங்களின் நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் ஆயுர்வேதத்தின் பயன் குறித்து எடுத்துரைத்தார். இக்கல்லூரியின் மாணவர்கள் எதிர்காலத்தில் ஆயுர்வேததின் தூதுவர்களாக இருக்குமாறும் ஸ்வாமிகள் அறிவுறுத்தினார்.
முன்னதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பூர்ண கும்ப மரியாதையுடன் ஸ்வாமிகளை வரவேற்றனர். அதன் பின்பு, புதுப்பிக்கப்பட்ட பொது வார்டு கட்டிடத்தை மங்களகரமான சடங்குகள் மூலம் திறந்து வைத்த ஸ்வாமிகள் மருத்துவமனையின் பிற வசதிகளையும் பார்வையிட்டார். ஆயுர்வேத மருத்துவம் அனைத்து தரப்பு பொதுமக்களையும் சென்றடையுமாறும், நோயற்ற சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய முயற்சிகளை எடுக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சி SCSVMV நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் வேந்தர் பேராசிரியர் டாக்டர் வேம்பட்டி குடும்ப சாஸ்த்ரி, துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் ஜி ஸ்ரீநிவாசு, சுகாதார அறிவியல் டீன் பேராசிரியர் டாக்டர் எஸ் சுவாமிநாதன், அறிவியல் துறை டீன் பேராசிரியர் கே வெங்கடரமணன், ஆயுர்வேத கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் சித்த ரஞ்சன் தாஸ், துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் பிரவீன், நிர்வாக துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ஜி ஆர் ஆர் சக்ரவர்த்தி, நிர்வாக அலுவலர் திரு எஸ். சங்கரநாராயணன், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆயுர்வேத மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .