புதிய தொடக்கப் பள்ளி மூலம் 500 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான திறனை விரிவுபடுத்துகிறது

சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளி - Tiruvallur District News
சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளி

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேவாலயாவின் கசுவா மையத்தில் ₹2 கோடி மதிப்பிலான புதிய தொடக்கப் பள்ளித் 1st ஜனவரி 2023, அன்று,  திறக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை  TVS Automobile Solutions குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி அரவிந்த் சீனிவாசன் திறந்து வைத்தார். திரு அரவிந்த் சீனிவாசன் ,அவர்கள் தனது மனைவி ராதிகா சீனிவாசனின் நினைவாக கட்டிடத்தை கட்டுவதற்கு நிதியுதவி செய்துள்ளார்.

மொத்தம் 9,304 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த தொடக்கப் பள்ளியில் ஒன்பது வகுப்பறைகள் உள்ளன. ஒவ்வொரு வகுப்பறையும் சுமார்  600 சதுர அடி அளவில் மிகவும் விசாலமான மற்றும் காற்றோட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய கட்டிடத்தின் மூலம், கூடுதலாக 500 ஆதரவற்ற குழந்தைகளுக்கு  தரமான கல்வியை சேவாலயா நிறுவனத்தால் வழங்க முடியும்.



சேவாலயா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இவ்விழா இனிதே தொடங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரவிந்த் சீனிவாசன், மறைந்த அவரது மனைவி ராதிகா சீனிவாசன் நினைவாக பள்ளிக்கூடம் கட்டப்பட்டதில் பெருமை அடைவதாக  குறிப்பிட்டார். மேலும் பல திறமையான ஆசிரியர்கள், மருத்துவர்கள், கலெக்டர்கள் ஆகியோரை இப்பள்ளி உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சேவாலயா குழுவினர் இத்திட்டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். மறைந்த தனது மனைவியின் பிறந்த நாளான ஜனவரி 1ல், கட்டட திறப்பு விழா நடத்த வேண்டும் என்பது தான், தனது குறிக்கோளாக இருந்ததால், அது நிறைவேறியதில், மகிழ்ச்சி அடைந்ததாக  கூறினார்.



அரவிந்த் சீனிவாசன் பல வருடங்களாக சேவாலயாவுடன் தொடர்புடையவர். இயற்கைப் பேரிடர்கள் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது சேவாலயாவின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் தொடர்ந்து பங்களிப்பவர். சேவாலயாவில் பயிலும் 2 குழந்தைகளின் கல்விக்கும் நிதியுதவி செய்து வருகிறார்.

இக்கட்டிடத்தை  கட்டிய  கட்டட தொழிலாளர்களுக்கு சிறப்பு விருந்தினர் புதிய ஆடைகள் வழங்கினார்.

முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா முரளிதரன் வரவேற்புரையும், சேவாலயாவின் ஆலோசகர் அமர்சந்த் ஜெயின் நன்றியுரையை கூறினார்.