பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள சேவலாயாவில் இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா; ஏழை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு
பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள சேவாலயாவின் காயத்ரி நினைவு திறன் மேம்பாட்டு மையத்தில் இலவசக் கணினி மற்றும் தையல் பயிற்சி முடித்த 36 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா 1 நவம்பர் 2025 அன்று நடைபெற்றது.
இம்மையத்தை சேவாலயாவிற்கு நன்கொடையாக அளித்த, எம் என் காயத்ரி தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கே பாலசுப்ரமணியன் அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். எம் என் காயத்ரி தொண்டு நிறுவனம் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கு நிதியுதவியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவில் பேசுகையில் பாலசுப்ரமணியன் அவர்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற அண்மைக்கால தொழில்நுட்பங்களில் மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பல்வேறு மொழிகளைக் கற்பதும் ஒரு வகையான திறன் மேம்பாடு என்றும், உலகில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்வதற்கு வாய்ப்புக்களை அது உருவாக்கும் என்றும் கூறினார்.
முன்னதாக, சேவாலயாவின் அப்லைட் லேர்னிங்க் துறைத் தலைவர் ஆனந்தன் எம் டி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா முரளிதரன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். ஏழைப் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் வாழ்வை முன்னேற்றுவதே சேவாலயாவின் நோக்கம் என்று கூறினார்.
மேலும் சேவாலயாவில் ஏ சி மெக்கானிக் பயிற்சி முடித்த இளைஞர் ஒருவரின் வாழ்க்கை நிகழ்வை அவர் தனது உரையில் பகிர்ந்து கொண்டார். வாழ்வில் நல்வழிமாறிய அந்த இளைஞர், சேவாலயாவில் சேர்ந்த பிறகு, நன்றாகப் படித்து வேலைவாய்ப்பு பெற்று, தனது முதல் மாத சம்பளம் ₹10,000 த்தை சேவாலயாவிற்கு நன்கொடையாக வழங்கினார். சேவாலயா, கல்வி மட்டுமல்லாது, ஒவ்வொரு மாணவரின் வாழ்வில் ஒழுக்கத்தையும் நல்ல பண்புகளையும் வளர்க்கும் இடம் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர், தையல் பயிற்சி முடித்த 17 மாணவிகள் மற்றும் கணினி பயிற்சி முடித்த 19 மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கினார். கணினி பயிற்சி முடித்து வேலைவாய்ப்பு பெற்ற ஜஸ்டின் ரூபன் என்ற மாணவரும், தையல் பயிற்சி முடித்து சுயதொழில் செய்து வரும் ராணி என்ற மாணவியும் சேவாலயாவின் மூலம் தங்கள் வாழ்வில் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார உயர்வு அடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக ஆனந்தன் எம் டி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
1988 முதல் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சேவாலயா, தென்னிந்தியா முழுவதும் 55 மையங்கள் மூலம், ஏழை எளிய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, கிராம இளைஞர்களுக்கான தொழிற்கல்வி, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சுகாதாரம் மற்றும் கிராம வளர்ச்சித் திட்டங்கள், கோசாலைகள் மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளில் இலவச சேவை செய்து வருகிறது. 37 ஆண்டுகளில் 16 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது.

