“தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகளை” அறிமுகப்படுத்தும் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை
மைக்ரோலேண்ட் லிமிடெட்டின் சமூக மேம்பாட்டுப் பிரிவான மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, குன்னூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆரோக்கியமான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை முதல் நிலையான உணவு உற்பத்தி, நீர் மற்றும் மின் சேமிப்பு பற்றிய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இதன் பலதரப்பட்ட திட்டங்கள் உள்ளூர் சமூகங்களின் சூழல் சார்ந்ததாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தமிழ்நாடு கல்வித் துறை மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 2022 டிசம்பர் 12 அன்று நடத்திய சந்திப்பில் 10 தட்பவெப்ப நிலை பள்ளிகள் துவங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தனது மகிழ்ச்சியை தெரிவித்த தமிழ்நாடு கல்வித்துறை துணை ஆய்வாளர் திரு.சுகுமார் பேசுகையில், “தமிழ்நாடு கல்வித் துறை, மைக்ரோலேண்ட் அறக்கட்டளை மற்றும் கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையேயான புதுமையான கூட்டாண்மையான தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகளை துவங்குவதில் நீலகிரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக பூமியில் உண்டாகும் தாக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் என்பது எதிர்காலத்திற்கு தேவையான ஒரு செயலாகும். மைக்ரோலேண்ட் அறக்கட்டளையுடன் இணைந்து, கல்வித் துறையானது எதிர்காலத் திறன்களை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது, இது சரளமான ஆங்கில பேச்சு பயிற்சி முதல் டிஜிட்டல் கல்வியறிவு வரை பரவியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தின் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.
மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் திருமதி கல்பனா கார் கூறுகையில், எங்களது இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த தட்பவெப்ப நிலை பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு இடைநிலை ஆய்வக அணுகுமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. சிறப்புப் பயிற்சி பெற்ற உள்ளூர் இயற்கைக் கல்வியாளர்கள், பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள வானிலை நிலையங்களின் மாதிரிகள் மூலம் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மொபிடெக் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்த தானியங்கு வானிலை நிலையங்கள் மற்றும் லேப் கிச்சன் கார்டன்கள், ஆற்றல் திறன் கொண்ட சாதனங்கள் மற்றும் நீர் பாதுகாப்பு சாதனங்கள் போன்ற அம்சங்களுடன் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதுமையான தட்பவெப்ப நிலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்ட இந்த நிறுவல்கள், குழந்தைகள் நேரடியாக தங்களுக்குள்ளும், பெற்றோர் மற்றும் பெரியோர்களுடனும் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் பள்ளி வானிலை முறைகளை கண்காணிக்கவும் உதவுகின்றன” என்று கூறினார்.
பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் அமைப்பின் இயக்குனர் டாக்டர். அனிதா வர்கீஸ், கூறுகையில், கீஸ்டோன் அறக்கட்டளை கடந்த 29 ஆண்டுகளாக நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் செயல்பட்டு வருகிறது. சமீபத்திய காலங்களில், தட்பவெப்ப நிலை தொடர்பான பேரழிவுகள் இப்பகுதியை பெரிதும் பாதித்துள்ளன, மேலும் சுற்றுச்சூழல் குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். இதன் காரணமாக மைக்ரோலேண்ட் அறக்கட்டளையுடன் இணைந்து நீலகிரியில் தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் நிர்வாகத்தினரின் துணையுடன் இந்த திட்டம் அரையாண்டுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள், சவால்கள் மற்றும் தீர்வுகளை நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள பரந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் திரு கே.தேவேந்திரன் கூறுகையில், விவசாயிகளுக்கு நிலையான மற்றும் புதுமையான உள்கட்டமைப்புடன் கூடிய வயர்லெஸ் தீர்வுகளை வழங்குவதை மையமாகக் கொண்டு மொபிடெக் நிறுவனம் பணியாற்றி வருகிறது, தற்போது இந்த திட்டத்திற்காக 10 பள்ளிகளில் மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்படும் வானிலை நிலையங்களை நிறுவியுள்ளோம். தொழில்நுட்பத்தை உட்பொதித்து, கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், மாற்றத்திற்கான ஆதாரமாகத் தரவுகளை பயன்படுத்தவும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பல முன்முயற்சிகளுடன் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் கல்வியாளர்கள், பெருநிறுவன நிதி வழங்குநர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடையே சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒரு நீண்ட கால ஒத்துழைப்பை உருவாக்க தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. நீலகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வழங்குவதன் மூலம் கல்வி நிலையை மேம்படுத்துவதில் இந்த அறக்கட்டளை முன்னணியில் உள்ளது.