உலகின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்க வேண்டும்! – தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்து 2500 ஆண்டுகள் நிறவடைவதையொட்டி, ஆதிசங்கர பகவத்பாதர்கள் அருளிச்செய்த கிரந்தங்கள் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை இந்தப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மற்றும் இந்திய கலாச்சாரத்துறை நடத்தியது.
சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி பேசினார். அப்போது “ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் வலிமையான மற்றும் ஒன்றுபட்ட பாரதத்தை உருவாக்கி, நாடு முழுவதும் பிரமாண்ட தலங்களை நிறுவினார். அவை சனாதன தர்மத்தின் ஊற்றுக் கிணறுகளாக இருந்தன. ஆதி சங்கராச்சாரியாரின் 2500வது சித்தி ஆண்டு விழா, நமது கலாசாரம் மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தில் பெருமையுடன் கூடிய, வளமான மற்றும் இணக்கமான பாரதத்தை உருவாக்க உறுதியுடன் நம்மை அர்ப்பணிப்பதற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். இதுவே பாரத தாயின் இந்த தெய்வீக மகனுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். இந்தியாவில் பல்முனை தாக்குதல் இருந்தபோதும், அதையெல்லாம் தாண்டி சனாதன தர்மம் நிலைத்து நிற்கிறது”.
“ஆதிசங்கரர் காட்டிய வழி இந்திய காலச்சாரத்தை பாதுகாக்க மிகவும் முக்கியமானதாக உள்ளது. சனாதன தர்மம் என்பது நமது பாரதத்தின் ஒழுக்க நெறி கொண்ட வாழ்வியல் முறையை குறிப்பது. சனாதன தர்மத்தின் மீது ஆங்கிலேயேர் காலம் முதல்கொண்டு பலமுனை தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அதையெல்லாம் தாண்டி நிற்கிறது. நமது பாரதம் தற்போது வளர்ச்சி பெற்ற பாரதமாக மாறி வருகிறது. ஆதிசங்கரர் போன்றோர் காட்டிய வழியில் நாமும் முன்னேறுவோம்”.
“பாரதம் மிகப்பெரிய தேசம் இங்கு பல ரிஷிகளும் மகன்களும் வாழ்ந்து பல நல்ல அறிவுரைகளையும் ஒழுக்க நெறிமுறைகளையும் வழங்கியுள்ளனர். இதனால் தான் நம் தேசம் இன்னும் தெய்வீகத் தன்மையுடன் மிளிர்கிறது. இன்றைய சூழலில் உலகின் தலைமைப் பொறுப்பை நமது பாரதம் ஏற்கும் அளவுக்கு நமது தேசத்தை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சொல்லவேண்டியது இது போன்ற கல்வி நிறுவனங்களின் கடமையாகும்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில், “ஆதிசங்கரர் விழா இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. ஏன் இந்தியாவை தாண்டி நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் கூட நடத்துகின்றனர். ஆதிசங்கரர் அருளியை அத்வைத கருத்துகள் மதங்களை கடந்து முக்கியமானது. வேதங்களின் பொருள்தான் அத்வைதம். அமைதி, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை வலியுறுத்துவதுதான் அத்வைதம்” என்றார்.
விழாவின் அங்கமாக அமைக்கப்பட்டிருந்த ஆதிசங்கரர் வாழ்வில் நடந்த அற்புதங்கள் பற்றிய கண்காட்சியை ஆளுநர் ஆர். என். ரவி அவர்களுக்கு காண்பித்து ஒவ்வொன்றாக விளக்கினார் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
முன்னதாக பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.ஸ்ரீநிவாசு வரவேற்புரை வாசித்தார். கவுரவ விருந்தினர்களாக சென்னை ஐ.ஐ.டி. தலைவர் வி.காமகோடி, மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் காண்டி எஸ். மூர்த்தி, மெட்ராஸ் சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் என்.வீழிநாதன், பல்கலைக் கழக வேந்தர் வேம்பட்டி குடும்ப சாஸ்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஸ்ரீராம் மற்றும் பிற துறை தலைவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.